Friday, September 21, 2007

அர்ஜூனுக்குச் சொன்ன கதை...

ஹாய் அச்சு.... எப்பிட்றா இருக்கே....?

அங்க்கிள்... என்க்கு மன்சே சர்யில்லே....

ஏண்டா...? என்னாச்சு....?

எப்பப் பாத்தாலும் எங்கம்மா என்னைத் திட்றாங்க அங்கிள்....அடிக்றாங்க அங்க்கிள்...

ஏன்...?

நான் மக்குப் பையன்னு திட்றாங்க அங்க்கிள்...ரொம்ப சேட்டை சேட்டையா பண்றேன்னு அடிக்றாங்க அங்க்கிள்....

ஓ அப்டியா...? சரி நீ எங்காத்துக்கு வா....

நானும் அச்சுவும் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்.

முற்றத்தில் கனமான சங்கிலியால் ஒரு ஊஞ்சல் விட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் நானும் அச்சுவும் அமர்ந்துகொண்டே ஊஞ்சலை ஆட்டினேன்.

அம்மா ஃபில்டர் காஃபியை சூடாக டவராவில் ஆற்றிக்கொண்டே எங்களை நோக்கிவந்தார். அதன் வாசம் எங்களின் நாசியைத் துளைத்தது. காஃபியை துளித்துளியாய் ரசித்து ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தோம நானும் அச்சுவும்..

அதன் தித்திப்பு நாவில் திளைத்து தொண்டையில் துளித்துளியாய் கசப்பும் இனிப்பும் கலந்து உணவுக் குழாய் வழியே துளித்துளியாய் பயணித்து இரைப்பையை நனைத்து அங்கிருந்த ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தினை நீர்க்கச் செய்தது. பூஜையறையிலிருந்து பஜகோவிந்தம் ஒலித்துக்கொண்டிருந்தது.

"சொல்லுங்க அங்கிள்...எதையோ சொல்ல வந்தீங்களே...."

"நீ 'அங்க்கிள்... என்க்க்கு மன்சே சர்யில்ல்லென்னு... 'சொன்னியே. அதே மாதிரிதாண்டா ஒரு குட்டிப் பையனும் சொன்னான்..."

அப்டியா அங்க்கிள்.... அவனுக்கென்ன ப்ரச்சினை...?

அவனும் அப்டித்தாண்டா ஒரு முறை.. பக்கத்தாத்து அங்க்கிள்ட்ட வந்து, "அங்க்கிள்... என்ன்க்க்கு மன்ன்ஸே சர்யில்ல்லெ.." னு சொன்னான்.

"ம்ம்ம்... சொல்லுங்க அங்க்கிள்... யூ ஆர் எ குட் பாய் லைக் மீ..." அச்சு.

:):):):):) நான் சிரித்தேன்.... மேலே தொடர்ந்தேன்...

ஒரு தடவ எல்கேஜி படிக்ற ஒரு சின்னப் பையன் எதுத்த வீட்டுக்கு வந்தான். அங்ஙன இருந்த அந்த வீட்டுக்காரரிடம் இப்டி சொன்னான்:

"அங்க்...க்கிள்... என்க்கு மன்ஸே சரியில்லே..." அப்டீன்னு அவனுக்கே உரிய மழலைல நீட்டி ரொம்ப சோகமா சொன்னான்.

அந்த அங்க்கிளுக்கு என்னவோ மாதிரி ஆய்டிச்சி...

அவருக்கு என்ன ஒரு ஆச்சர்யம்னா... அட்டே... இவ்ளோ ஒரு குட்டிப் பையனுக்கும் பிரச்சினையா...? அதுவும் மன்சே சரியில்லை ன்னு சொல்ற அளவுக்கு அவனுக்குப் பிரச்சினையா...? அப்டீன்னா அவனுக்கு மன்ஸே சரியில்லாத அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சினையோன்னு இவருக்கு ஒரே குழப்பமும் அதிர்ச்சியுமா இருந்துச்சி.



"தம்பி ... ஒனக்கு அதுவும் மன்ஸே சர்யில்லாத அளவுக்கு அப்டி என்ன பிரச்சினை....?" அப்டீன்னு கேட்டார்.

"அங்க்..க்கிள்.. அது வெள்ய ச்சொல்ல முஜியாத அயவுக்கு ஒயே கஷ்டமா இர்க்கு..."

"அடப் பரவால்லப்பா... எங்கிட்ட சொல்லு நான் பாத்துக்கரேன்..." அப்டீன்னு கொஞ்சம் தாஜா பண்ணி சமாதானப் படுத்தினார். அந்தக் குட்டிப் பையனுக்கு இவர் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு.

மெதுவா சொல்ல ஆரம்பிச்சான்.

"அங்க்கிள் ஸ்கூல்ல டீச்சர், 'ஏண்டா தண்டம் தருமாந்த்ரம்....ஏன் என்னோட்த் தொண்டைத் தண்ணிய வாங்குற... பேசாம நாலு எருமை வாங்கி மேய்க்கவேண்டியதுதானே...நீ இப்ப படிக்கலேன்னு யாரு அழுதா...' அப்டீன்னு திட்ருங்கா...வீட்டுக்கு வந்தா அம்மா,'ஏண்டா சனியனே...நீ ஏந்தான் என் வயித்துல பொறந்தியோன்னு...'திட்றாங்க... நான் என்ன செய்ய அங்க்கிள்...என்க்குப் படிப்பே வர மாட்டேங்குது....அதான் எங்குட்டாச்சும் ஓடிபோஜயிடலாமான்னு யோசிக்றேன்... " அப்டீன்னு சொன்னான்.

"வெரிகுட்.... இதை யார்கிட்டயும் சொல்லாதே... ரொம்ப ரகசியமா வச்சிரு...நாளைக்குக் காலையில ஒன்னோட ஸ்கூல் பேக், லஞ்ச், வாட்டர் பேக்கு எல்லாம் எடுத்துட்டு ஸ்கூலுக்குப் போறமாதிரி எங்காத்துக்கு வந்துடு.. நானும் ஆபீசுக்குக் கெளம்ப்றமாதிரி கெளம்பி வாரேன்... நாம ரெண்டுபேரும் எங்கயாச்சும் ஓடிப்போயிடலாம்...." அப்டீன்னு அந்த அங்க்கிள் சொன்னார்.

"ஏன் அங்க்கிள் உங்களுக்கும் என்ன மாதிரி யாராச்சும் டார்ச்சர் பண்றாங்களா....?"

"ஆமாம்ப்பா... அந்த மேனேஜர் பைய(ன்) நான் என்ன செஞ்சாலும் நீ கழுத மேய்க்கத்தான் லாயக்கு...ன்னு திட்றான்... சரின்னு வீட்டுக்கு வந்தா பொண்டாட்டி, 'ஒரு துப்பு இல்லை...ம்ம்ம் எனக்குன்னு வந்து வாச்சிருக்கே...எல்லாம் கெரகம் னு 'திட்றா...எனக்கு ரெண்டு பக்கமும் அடி தம்பி..." அப்டீன்னு சொன்னார்.

மறுநாள் குட்டிப்பையன் ஸ்கூலுக்குப் போறதா சொல்லிட்டு அந்த முக்குக்கு வர...அங்க்கிள் ஆபீஸுக்குக் கெளம்ப்றேன்னு சொல்லிட்டு அந்த முக்குக்கு வர ரெண்டு பேருமே சேர்ந்து தோட்ட்த்துக்குப் போனாங்க....

அங்கன கள்ளம் போலீஸ், கிட்டி, பேந்தான், பம்பரம், காக்கா குஞ்சு, ஐஸ் பிளே, கெணத்துத் தண்ணியில நீச்சடிச்சி ன்னு எல்லா வெளாட்டுகளும் வெளயாண்டாங்க.

பசிக்க ஆரம்பிச்சது...

ரெண்டு பேருமே மஞ்சனத்தி மரத்து மேலே ஏறி ஒக்காந்தாங்க. கொண்டு வந்த லஞ்ச்சை சாப்ட ஆரம்பிச்சாங்க. அப்ப அந்த அங்க்கிள் கேக்றார்...

"ஸ்கூல்ல எந்தப்பாடம்ப்பா பிரச்னை....?" அப்டீன்னு...

"கணக்குதான் அங்க்க்கிள்...."

"பூ... இவ்ளோதானா...? சரி இப்ப உங்காத்ல இருக்ற ரேடியோவைக் காணோம் னு வச்சுக்கோ... நீ என்ன செய்வே....?"

ரொம்ப சிம்ப்பிள் அங்க்கிள். உடனே நான் போலீசுக்கு ஃபோன் பண்ணுவேன்.

அப்றம்...?

ஸ்டேஷ்ன்ல்ருந்து 2 கான்ஸ்டபிள்களும் ஏட்டும் இன்ஸ்பெக்டரும் வருவாங்க...
ஓ,,... இதெல்லாம் ஒன்க்கெப்பிட்றா தெர்யும்...?

நிறைய சினிமா டிவி பொட்டியில போடுறாங்க அங்க்கிள்...

குட்... அப்றம்...?

"யோவ் 302 .. என்கொயரிய ஸ்டார்ட் பண்ணுயா... அப்டீன்னு அந்த இன்ஸ்பெக்டர் அவங்கள வெரட்டுவாரு...

அப்றம் அவரே ஸ்டார் பண்ணுவாரு...
ம்ம்... இங்கே என்ன காணோம்...?"

"ரேடியோ..."

"ம்ம்...த்ரி நாட் டூ ... நோட் பண்ணிக்கோ... காணாமப் போன பொருள் ரேடியோ..."

"சார்.... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார்...."
"நோ ஃபீலிங்க்ஸ்...."
அப்றம் அவரே கேள்விய கேப்பார்...

"எப்ப இருந்து ரேடியோவைக் காணோம்....?"
"நேத்துல இருந்து சார்..."

"கான்ஸ்டபிள்... நோட் பண்ணிக்க... நேத்ல இருந்து காணோம்...."

"ஸார்.... நீங்க அறிவுக் கொழுந்து சார்..."

"ஆமா.... கிள்ளி வாய்ல போட்டுக்கோ...ம்ம்... சரி நேத்து எப்ப இருந்து காணாமப் போச்சு....?"

ஆஹா பயபுள்ளக ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க...(மனசுக்குள்ள பேசிட்டு).

"இனி எவன் திருடுனான்... எப்ப திருடினான்...? எப்டி திருடினான்...? எங்க ஓடுனான்...? இப்ப எங்க இருக்கான்...? இப்டி எல்லாமே தெரிஞ்சிருந்தா நான் ஏன் சார் உங்ககிட்ட கம்ப்ளைய்ண்ட் கொடுக்கனும்...?"
"302 நோட் த பாய்ண்ட்.... இவருக்குத் திருடனத் தெரியாது..."
"சார்.... நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார்..."
"நோ ஃபீலிங்க்ஸ்..... டூ டூயூட்டி....நமக்கு டூயூட்டிதான்ய்யா முக்யம்...." அப்டீம்பார்.
அப்றம் அவரே,
"எத்தன மணிக்குக் காணோம்...?"
"நைட்டு பத்து மணிக்கு பாட்டு கேட்டுட்டு ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்டேன் சார்..."

"ஆக... திருடன் ராத்திரி பத்து மணிக்கு மேலதான் வந்திருக்கனும்...தட்ஸ் குட்.." அப்டீன்னு சொல்லிட்டு அந்த வீட்டுக்கு வர்ரதுக்கு என்னென்ன வழிகளிருக்குன்னு பாப்பாங்க... அப்றம் நைட்டு அங்கன டீ கடை போட்ட டீக் கடை நாயர் ட்ட விசாரணை நடக்கும்... அப்றம் ரேடியோவைத் திருடின கபாலிய கபால் னு பிடிச்சிடுவாங்க அங்க்க்கிள்....
அதே தாண்டா... கணக்கும்.... புரியாத புதிர்களை X,Y, Z ன்னு எத்தனை வழிமுறைகள் இருக்குன்னு பாத்து கண்டுபிடிக்றதுதாண்டா கணக்கு...

"ப்பூ...இவ்ளோதானா அங்க்க்கிள்... நான் கூட என்னமோ ஏதுவோன்னு நெனச்சி பயந்தேன் அங்க்க்கிள்... இனிமே பாருங்க அங்க்க்கிள்...." அப்டீன்ன்னு அந்தக் குட்டிப் பையன் சொன்னான்.

அப்றம் அவன் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சான். இப்டி ஆர்வமா கணக்க போட ஆரம்பிச்சான். சில கணக்குகளுக்கு டீச்சர்க சொல்ற விடை தப்புன்னு சொன்னான். ஆனா யாரும் அவம் பேச்சக் கேக்கல.... இப்டி ஆராய்ச்சி பண்ணியதால அவனுக்கு மார்க்க்கு போச்சு

பாலி டெக்னிக் கூட கஷ்டப்பட்டுதான் 2 தடவை எண்ட்ரன்ஸ்ல பெயிலாகிதான் சேர்ந்தான்.

மார்க் எடுக்கக் கஷ்டப்பட்டான். இந்த மார்க்க்குக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை.... ஆனா அவன் ஆராய்ச்சி மட்டும் அதாவது புதிருக்கு விடைகாணும் அந்த ஆர்வம் மட்டும் நாளுக்கு நாளா வளந்துகிட்டே இருந்துச்சு

ஒரு நா(ள்) அந்த ப் பையன் பெரிய பையனானான்.

அவன் பெளதிகத்ல பல புதிய கண்டுபிடிப்புக்க்களைக் கண்டுபிடிச்சான்.
அவனோட Thoery of Relativity ரொம்ப உச்சத்துக்கு போச்சு... ஆனா அவனுக்கு Nobel Prize கெடைச்சதோ "Photo Electric Effect" க்கு....

அப்ப நம்ம ஊர் தினத்தந்தி நிருபர் மாதிரி ஒருத்தர் அவர்ட்ட இப்டி கேள்வி கேட்டாங்க...

"ஐன்ஸ்டீன்... ஐன்ஸ்டீன்.... உங்களோட வெற்றியின் ரகசியம் என்ன...?"னு

அதுக்கு ஐன்ஸ்டீன் சொன்னார்,

"எந்த ஒரு வேலையையுமே தனக்கு ஆர்வமா இருந்திச்சுன்னா எந்த ஒரு முட்டாளும் அதை விரும்பி செய்வான்.... நானும் அந்த ரகம்தான்...வெள்ளக் கட்டிய மேல வச்சி, எறும்பைக் கொஞ்சம் கீழே விட்டா...ச்சின்னச் சின்ன எறும்பு கூட இமயமலை ஏறாதோ....?" அப்டீன்னார்...

"சரி...அங்க்கிள்... இனிமே நானும் ஆர்வமா இருப்பேன் அங்க்க்கிள்... அம்மா சொன்னாலும் சரி அப்பா சொன்னாலும் சரி... என்க்கு ஆர்வமானதுல மட்டுந்தா நான் வேலை செய்வேன் அங்க்க்கிள்...ஒங்ககிட்ட பேசினதக்கப்றம்... என்க்க்கு மன்ஸே உற்சாகமாயிடுச்சு அங்க்க்கிள்... அதான் நான் சொன்னேனே ரவீந்திரன் இஸ் எ குட் பாய் லைக் மீ... " அச்சு....

"பெரியவங்க இருக்ற எடத்ல நாமதான் அச்சு சர்வ ஜாக்ரதையா இருந்துக்கனும்..."

ஓகே அங்க்கிள்...

பை...பை....

"ஆமா... இன்னிக்கு உனக்குப் பிறந்த நாள் இல்லியா... வா... "என அழைத்துக்கொ ண்டு பூஜை அறைக்கு விரைந்தேன்.

"எந்த்த தூரம் போத்திவ்விரா....கிருஷ்ணா...." என்ற தியாகராஜரின் கீர்த்தனைகளைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன்....

தன்னிலை மறந்து லயித்திருந்தோம்.

(குறிப்பு: இந்தக் கதையை நான் நம்ம ஜெயந்தி அம்மா அவர்களின் புதல்வன் அர்ஜூன் என்னுடைய 3 ஆம் வகுப்பு மாணவனாக இருந்தபொழுது அந்த வகுப்பு மாணவர்களுக்குச் சொன்ன கதை....! இதனாலேயே என்னைச் சுற்றி எப்பொழுதும் இந்த நிமிடம் வரை வாண்டுகளின் கூட்டம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும்....! நல்ல ஃப்ரண்ட்ஸ்... )

Wednesday, June 13, 2007

ஓடாதே... ஒரு பக்கக் கதை...

ஓடாதே

10 வயது துருதுருப்புடன் எப்பொழுதும் நான் ஓடி விளையாடுவதைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருமே “ஓடாதே” என எச்சரிப்பர்.இதிலென்ன அதிசயம்...? இது எல்லார் வீட்டிலும் சகஜம்தானே...?

அடடா... நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேயில்லையே..! நான்...?

என் பெயர் சீனிவாசன். என்னை சீனு என்றே செல்லமாக அழைப்பர். நான் என் அண்ணனின் தம்பியா அல்லது மகனா என்று தெரியவில்லை. என்ன தலை சுற்றுகின்றதா...?

வெங்கடேஷ் அண்ணாவின் உடலிலிருந்து செல்லினை எடுத்து க்ளோனிங்க் முறையில் உருவாக்கப்பட்ட இந்த உலகின் முதல் க்ளோனிங் குழந்தை.

உலகமே என்னை உருவாக்கத் தடைசெய்தது... கடவுளுக்கும் இயற்கைக்கும் செய்யும் கொடுமை என எச்சரித்தனர்.

யார் சொன்னது க்ளோனிங் குழந்தை என்றால் அலட்சியம் செய்து வளர்ப்பார்கள் என்று...? எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள்... என் மீது பொழியும் அன்பு மழைக்கு நான் என்ன தவம் செய்தேனோ...? குறிப்பாக வெங்கடேஷ் அண்ணா என் மீது காட்டும் பரிவும் அன்பும் அபரிமிதமானது. ஒருவேளை அவரது உடலிலிருந்து செல்லெடுத்து நகலெடுக்கப்பட்டதால் என் மீது அபரிமிதமான பாசமோ...? அனைவரும் என்னை ஓடாதே என்று அன்பால் எப்பொழுதும் எச்சரித்துக்கொண்டிருப்பர்.

ஒரு நாள் ஓடி விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது நான் ஜன்னலில் ஏறி ஹேய் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பயப்படவைக்கவேண்டும் என எண்ணி ஜன்னலருகே சென்றேன். அம்மாவும் வெங்கடேஷ் அண்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சில் என் பெயர் அடிபடவே நான் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

“டேய் வெங்கடேஷ்.... கொஞ்சம் பொறுடா... அவனுக்கு இப்பத்தான் 10 வயசு ஆகுது....அவனோட உடம்பு நல்லா வளரட்டும்...அப்பொழுதுதான் அவனோட உடல்உறுப்புக்கள் நல்ல ஆரோக்யமாக இருக்கும்....இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அவனோட இதயத்தை எடுத்து உனக்கு ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணிடலாம்...மீதி உறுப்புக்களை நல்ல விலைக்கு வித்துடலாம்...”